மறுபக்கம்

மறுபக்கம்

ஜூலை 2014 – தினமணிக் கதிரில் லாவண்யா பெருமாள்சாமி என்ற பெயரில் வெளியானது

வீட்டுக்கு வந்த பின்னரும் இன்று செயலாளர் கூட்டத்தில் எழுப்பிய ஒரு பிரச்சனையைப் பற்றிய சிந்தனையில் தான் என் மனம் உழன்று கொண்டிருந்தது. இருபது வீடுகள் அடங்கிய எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் செயலாளர் நான் தான்.

அதனால் இந்தப் பிரச்சனையை நான் தான் பேசிக் கையாள வேண்டும் என மற்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முடிவெடுத்து விட்டனர். அதனால் தப்பிக்க முடியாது. அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன் என்று மலைப்பாக இருந்தது.

என் தியான நிலையைப் பார்த்த என் மனைவி, “எந்த ஆட்சியைப் பிடிக்க இவ்வளவு பலமா யோசனை பண்ணிட்டு இருக்கீங்க?” என்று என்னருகில் வந்து அமர்ந்தாள்.

“ஆட்சியைக் கூட எளிதாகப் பிடிச்சிடலாம் போல இருக்கு, தமிழ்” என்று அவளைப் பார்த்தேன்.

“நீங்க ஆட்சியைப் பிடிச்சுட்டாலும்..” என நொடித்துக் கொண்டு, “என்ன விஷயம்?” என்று மீண்டும் கேட்டாள். கூட்டத்தில் விவாதித்ததைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.

“நம்ம பக்கத்து வீட்டுக்குப் புதுசா வந்திருக்காரே ரகுநந்தன்.. அவர் மனைவியோட செயல் இங்க இருக்கறவங்களுக்குப் பிடிக்கலைங்கிறதைப் பத்தி அவர்கிட்ட நான் பேசணுமாம்”

“அட.. நான் கூட உங்ககிட்ட சொல்லணும் என இருந்தேன். இங்க இருக்கறவங்களும் அப்படித் தான் நினைக்கறாங்களா?” என தமிழ்செல்வி சொன்னதை நான் நம்பவில்லை.

இங்கே வளாகத்தில் குடியிருக்கும் பெண்களில் பலர் என் மனைவி உள்பட, அடுத்தவரைப் பற்றிப் புறணி பேசுவது எனக்குத் தெரியும். எனக்கு அது பிடிக்காது என்று தமிழ்செல்விக்குத் தெரியும் என்பதால் என் காதுகளுக்கு எந்த விஷயத்தையும் எடுத்துக் கொண்டு வரமாட்டாள்.

“புதுசா வந்திருக்காங்க அப்படிங்கற அக்கறையில அந்த வீட்டுகாரம்மாகிட்டப்  போய் பேசப் போனா, அவங்களுக்கு என்னுடன் பேச நேரமில்லையாம்… ஆனா, சனிக்கிழமையானா, சாயந்திரம் நல்லா மினுக்கிகிட்டு தனியா வெளில போயிட்டு நேரம் தாழ்த்தி வர்றதும், பளபளன்னு உடுத்திக்கிட்டு அவங்க வீட்டுக்கு நாலஞ்சு பொண்ணுங்க வர்றதும் ஒண்ணும் சொல்லிக்க முடியலை…” எனக் கிடைத்த வாய்ப்பை விடாமல் பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

ஊர்க் கதையையும், வம்பு வளர்ப்பதையும் பற்றி தமிழ் பேசி இருப்பாள் என்று எனக்குத் தெரியும். அதனால் அந்தப் பெண் அதைத் தடுக்க நினைத்து என் மனைவியிடம் அவ்வாறு சொல்லி இருக்கலாம். அந்தத் தைரியத்தைப் பார்த்துத் தான் இங்கிருப்பவர்கள் குமுறுகிறார்களோ? அதை இவளிடம் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ள விருப்பமில்லாததால், மனைவி சொன்ன கடைசி விஷயத்திற்கு மட்டும் பதில் சொன்னேன்.

“ஏம்மா, அவங்க வீட்டுக்கு வருவாங்க… போவாங்க… அதுல நமக்கு எதுவும் தொந்தரவு இல்லையே” எனக் கூட்டத்தில் எடுபடாத அதே பேச்சை என் மனைவியிடமும் சொன்னேன். கூட்டத்திலேயே எடுபடவில்லை.. மனைவியிடம் மட்டும் எளிதாக வெற்றி பெறுமா என்ன?

நானும் பலதடவை அந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறேன். மிகவும் அழகாக, செதுக்கி வைத்த சிற்பம் போல் இருப்பாள். இரு பெண்களுக்கு அம்மா என்று அவளைப் பற்றித் தெரியாதவர்களிடம் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அத்தனை இளமையுடனும், துடிப்புடனும் இருப்பாள். அதைப் பார்த்துத் தான் எங்கள் குடியிருப்புப் பெண்கள் பொறாமை கொண்டார்களோ?

அத்தோடு,  என் மனைவி சொல்வதைப் போல் எல்லாம் பக்கத்து வீட்டுப் பெண் கவிதா மினுக்கிகிட்டு  உடையணிவது இல்லை. எப்பொழுதும் போல் அல்லாமல் சனிக்கிழமைகளில் மட்டும் சற்று நேர்த்தியாக, இளவயதுப் பெண்கள் உடுத்துவதைப் போல் இளமைத் துள்ளலுடன் உடுத்தி, சிறிதளவு ஒப்பனையுடன் வெளியில் செல்வாள்.

“நேரடியாச் செஞ்சா தான் கெடுதலா? இத்தனை வயசாகியும் இப்படி நாகரிகமில்லாமல் உடுத்திட்டு, தலையை விரிச்சுப் போட்டுட்டு, கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா அதைப் பார்த்து நம்ம குழந்தைகளுக்கும் அந்த எண்ணம் வராதா?” என்றாள்.

‘எத்தனை வயசாகி?’ என வாய் வரை வந்த கேள்வியை முழுங்கிக் கொண்டேன். என் மனைவி சொன்னது எனக்கு ஏற்புடையதாக இல்லை. இதையே தான் கூட்டத்திலும் சொன்னார்கள். எத்தனை வயதானால் என்ன? உடை அணிவதும், சிகை அலங்காரமும் அவர்கள் விருப்பம். அந்தப் பெண்ணிற்கு சற்று வயதாகிவிட்டது என்பதால் மட்டும் அந்த விருப்பத்தைக் கடாசி விட வேண்டும் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?

அத்தோடு நேரம் என்பது அவரவர் உடைமை. அதில் தலையிடுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒருவேளை இங்கிருக்கும் பெண்களால் பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்க முடியவில்லை என்ற எரிச்சலில் தான் கணவன்மார்களை தூண்டிவிட்டார்களோ?

இதையெல்லாம் சொன்னால் என்னை விரோதியாகப் பார்ப்பார்கள். “அவங்க வீட்ல இருந்து பாட்டுச் சத்தமும், பேச்சுச் சத்தமும் அதிகமாக் கேட்கறதுனால பிள்ளைகளோட படிப்புக் கெடுது எனச் சொல்லி இதை ஓர் முடிவுக்குக் கொண்டு வாங்க…” என எப்படிப் பேசுவது என எனக்குச் சொல்லித் தந்தாள் தமிழ்செல்வி.

என் மனைவி சொன்ன காரணத்தைக் கேட்டு எனக்குச் சிரிப்பு வந்தது. பின்னே, என் மகன் இரண்டாம் வகுப்பும், மகள் யூ.கே.ஜியும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் படிப்புக் கெடுகிறதாம். சிரித்தால் தமிழ் ஏதாவது கடவுள் அவதாரம் எடுக்க வாய்ப்பிருப்பதால், “அதுவும் சரி தான்” என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டேன்.

ஆனாலும் அவள் விடவில்லை. “அவங்க பொண்ணுங்க தான் படிக்கலைன்னா நம்ம பசங்க அப்படியா?” எனத் தொடர்ந்தாள்.

ரகுநந்தனின் இரட்டைப் பெண்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்கள். அது எப்படி அவர்கள் படிப்பில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது இவளுக்குத் தெரிந்தது? இவள் என்ன பள்ளியில் போய்ப் பார்த்தாளா? இது தான் ஒரு விஷயத்திற்கு கண், காது, மூக்கு, வாய் வைப்பதா?

ரகுநந்தனைப் பலமுறை பார்த்திருக்கிறேன். பார்க்கும் பொழுது பொதுப்படையாக நலம் விசாரித்துப் பேசிக் கொண்டதோடு சரி. ஆனால் இனியும் அப்படி விடமுடியாதே? எப்படியும் பேசித் தானே ஆகவேண்டும். அதனால், “சீக்கிரம் பேசுகிறேன்” என்று மனைவியிடம் சொன்னேன்.

ஒருத்தரின் அந்தரங்கத்தில் நுழைவது என்பது அநாகரிகம் என்ற கொள்கையுடையவன் நான். ஆனால் செயலாளர் என்ற காரணத்தினால் எனக்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா?  செவ்வாய் கிரகத்திற்குக் கூட சென்றுவிடலாம். ஆனால் பக்கத்து வீட்டில் இருப்பவரிடம் பேச்சு வார்த்தை நடத்த எப்படிப் போவது? விர்ரென்று நானும் போனேன்… மின்தூக்கியில்…

அந்த வாரக் கடைசியில் ரகுநந்தனை மின்தூக்கியில் ஏதேச்சையாகச் சந்திப்பதைப் போல் சந்தித்து, “பக்கத்து வீட்ல இருக்கோம்… ஆனா, பாருங்க… பார்க்கறதே அபூர்வமா இருக்கு” என்றேன்.

“ம்ம்ம்….” என அவன் சொன்னாலும், ‘நேத்துத் தானே பார்த்தோம்’ என்று கண்களால் கேட்டான்.

“நீங்க வந்து எவ்வளவு நாளாச்சு… ஆனா உங்களைப் பத்தி எதுவும் தெரியலை பாருங்க…” எனச் சொல்லி, ‘ஹி..ஹி.ஹி..’ என்று அசடு வழிந்தேன். கல்லூரியில் கூட இப்படி வழிந்ததில்லை!

பின்னர் இருவரும் படிப்பு, வேலை எனப் பொதுவான விஷயங்களைப் பகிர்ந்தவாறே மின்தூக்கியில் இருந்து இறங்கி வண்டி இருக்கும் இடம் வரையில் நடந்தோம்.

“நாளைக்கு நீங்க ஃப்ரீயா இருந்தா வாங்க… அப்படியே போய் காபி சாப்பிட்டு வரலாம் ரகு” என எங்களுக்குள் நெருக்கம் வந்துவிட்டதைக் காட்டுவதற்கு அவர் பெயரையும் சுருக்கி அழைத்து, வெற்றிகரமாக நான் பேசுவதற்கு ஓர் நேரத்தையும், இடத்தையும் குறித்துக் கொண்டேன்.

ரகுநந்தனிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது, என்ன பேசுவது, அவர் மனம் புண்படாமல் எப்படி விசயத்தைச் சொல்வது என்று பலமுறை ஒத்திகை பார்த்துவிட்டேன். பரீட்சைக்கு, ஏன் நேர்முகத் தேர்வுக்குக் கூட, நான் இந்தளவுக்கு என்னைத் தயார் செய்ததில்லை.

ஆனால் பரீட்சையில் வினாத்தாளைப் பார்த்ததும், படித்தது எதுவும் எப்படி நினைவுக்கு வருவதில்லையோ அதைப் போன்று தான் என் நிலைமையும் ஆனது. ரகுநந்தனைப் பார்த்ததும் ஒத்திகை செய்ததெல்லாம் மறந்து போக, என் மனைவி தந்த காபி சகிக்கவில்லை என்பதைப் போல் வாங்கிய காபியை அவ்வளவு அழுத்தமாக உறிஞ்சி ருசித்துக் கொண்டிருந்தேன்.

சற்று நேரம் பொதுப்படையாகப் பேசிய ரகுநந்தன், “விக்கி, என்கிட்டே என்ன சொல்லணும்ன்னு நினைக்கறீங்க?” எனக் கேட்டான். விக்னேஷ் என்ற எனது பெயரைச் சுருக்கி, நமக்குள் நெருக்கம் இருக்கிறது என்று காட்டுவது அவன் முறையாகிப் போனது.

“வந்து… தப்பா நினைச்சுக்காதீங்க… உங்க மனைவியோட செயல் அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை என அக்கம்பக்கத்தில நினைக்கறாங்க…” என ஒருவாறாகச் சொல்லிவிட்டேன்.

“எதைச் சொல்லறீங்க?” என ரகு கேட்கவும், “சனிக்கிழமையானா தனியா வெளில போயிட்டு நேரம் கழிச்சு வர்றதும்… உங்க வீட்ல மற்ற பெண்கள்  கூடுவதும்…” என நிறுத்தினேன்.

இதைக் கேட்டதும் அவனுக்கு என் மேல் கோபம் வரும் என்று பார்த்தால் புன்னகைத்துக் கொண்டே, “உங்களுக்குக் கல்யாணமாகி எத்தனை நாளாச்சு விக்கி?” என்றான் சாதரணமாக.

இதற்கும் நான் சொன்னதற்கும் என்ன சம்மந்தம் எனக் குழம்பியவாறே, “ஏழு வருஷம்” என்றேன்.

“உங்க மனைவிக்கு என்ன வயசு?” என ரகு கேட்கவும் எனக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது. அவன் மனைவியைப் பற்றிச் சொன்னதால் வேண்டுமென்றே என் தமிழை வம்புக்கு இழுக்கிறானா? என்ற எரிச்சலில் பதில் சொல்லாமல் அவனை முறைத்தேன்.

“தப்பான எண்ணத்துல கேட்கலை…” என அதே புன்னகையுடன், தன்மையாகச் சொன்னதும், “முப்பத்திரண்டு” என்றேன். அவன் மனைவியைப் பற்றிப் பேசும் பொழுது அபத்தமாகப் படாதது என் மனைவியைப் பற்றிக் கேட்டதும் அபத்தமாக ஏன் தோன்றுகிறது?

“கவிதாவுக்கும் அதே வயசு தான்” என்றதும் திகைத்தேன். பார்க்கச் சிறு பெண் போல் இருந்தாலும் இரு பெண்களின் தாய் என்பதால் குறைந்தது நாற்பதாவது இருக்கும் என நினைத்திருந்தேன்.

“உங்க மனைவிக்குக் கல்யாணம் ஆனப்போ அவங்களுக்கு எத்தனை வயசு?” எனக் கேட்டான்.

அவன் பேச்சில் எனக்கு சுவாரசியம் பிறக்க, அவன் கேள்வி இப்பொழுது எனக்குத் தப்பாகத் தெரியவில்லை. “இருபத்தஞ்சு…” என்றேன்.

“கவிதாவை நான் கல்யாணம் பண்ணும் போது அவளுக்கு வயசு பதினெட்டு. பனிரெண்டாவது தான் முடிச்சிருந்தா… அப்பா குடிச்சிட்டு தன்னையே அழிச்சுக்கிட்டார்… வேலைக்குப் போன அம்மாவும் விபத்துல போயிட்டாங்க. அதனால அவசரமா தூரத்து சொந்தமான எனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க. அப்போ கவிதா தேர்வு செய்து முடிவு பண்ணற நிலைமைல இல்லை…  அவளை அப்படியே விட எனக்கு மனமில்லை…” என்றான்.

“அப்புறம் எப்படி நல்ல வேலைக்குப் போறாங்க?” என என் சந்தேகத்தைக் கேட்டேன்.
“கல்யாணம் ஆனதும் உடனே எங்களுக்குக் குழந்தைகளும் பிறந்துட்டாங்க… அப்புறம் தான் கவிதா பட்டப் படிப்பை தபால் வழியா முடிச்சா… அதுவும் ரெண்டு பேரும் சம்பாதிச்சா பொருளாதார விஷயத்துல கஷ்டப்படாம இருக்கலாம் என்ற சுயநலத்தினால் அவளைப் படிக்கச் சொன்னேன்…” என்றான் ரகு.

அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கையை நினைத்து ஆச்சர்யப்பட்டேன். “என் பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்து கலாட்டாக்களைப் பற்றி கேட்க என் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிக்கும். எனக்கும் சொல்லறதுக்கு ஆயிரம் விஷயம் இருந்தது. ஆனா கவிதாவுக்குச் சொல்ல ஒரு விஷயமும் இருக்காது.

ஏன்னா, பள்ளிப் பருவத்துல, குடும்ப வறுமை காரணமாக வேறு எதிலும் அவள் கவனம் போகவில்லை. அப்புறம் நல்லாப் படிச்சிருந்தும் கல்லூரிப் பருவமே இல்லாமல் போனது… அப்படி இருக்கறப்போ நல்ல அனுபவத்திற்குக் கண்டிப்பா பஞ்சம் இருக்குமே…”

“உண்மை தான் ரகு… அந்த இளமைப் பருவம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் எத்தனை முக்கியம்! எத்தனை விதமான அனுபவங்கள்… எத்தனை நண்பர்கள்… எத்தனை நிகழ்வுகள்.”

“ம்ம்ம்ம்… கல்லூரிப் படிப்பில் இருந்து வேலை, அப்புறம் கல்யாணம் என்று அடுத்த கட்டத்திற்கு போகும் வரை கொஞ்சம் சுதந்திரம், கொஞ்சம் கவலை, கொஞ்சம் கலகலப்பு என்று வாழ்க்கையை சிறகை விரித்து அனுபவிக்கும் பருவம். அது என் கவிதாவுக்கு இல்லாமலேயே போயிடுச்சு…”

பாவம் அந்தப் பெண் என்று நினைத்துக் கொண்டேன். “ஆனா பாருங்க, கவிதா நிறைய வாசிப்பா… ஓவியம் வரைவா… அவளுக்கு வெட்டியா அரட்டை அடிக்கறது பிடிக்காது. அவள் என் பெண்கள்கிட்ட அதைப் பற்றி உற்சாகமா பேசறதைக் கேட்டு அதிசயப்பட்டுப் போனேன்.

எனக்கு இலக்கியம் பத்தியும், ஓவியக்கலைப் பத்தியும் எதுவும் தெரியாது. என் பெண்களுக்கு ஓரளவுக்குத் தான் நேரம் கிடைக்கும். ஆனால் இவளைப் போல் ஒத்த சிந்தனையுள்ளவர்களிடம் இவள் பேசினால் எப்படி உணர்வாள் என்று யோசித்தேன்.

வார நாட்களில் வேலையில் மெனக்கெடுவா. வாரக்கடைசியில குடும்பத்திற்கு உழைப்பா. அவளுக்கென்று ஓர் அந்தரங்கம், தனிமை என எதுவும் இல்லாமேலேயே போயிடுச்சு. அதனால் தான் அவள் தவறவிட்ட அந்தக் காலத்தை அவள் வாழணும் அப்படின்னு முடிவு பண்ணி நானும் என் பெண்களும் அவளுக்கு இந்த ஐடியாவைச் சொன்னோம்”  என்றான் ரகு.

வேலையில் இருந்து தாமதமாக வந்தாலே ‘எங்க போய் சுத்திட்டு வர்ற?’  என்று கேட்கும் கணவன்மார்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவனா? என்று அவன் மேல் மதிப்பும், மரியாதையும் கூடியது.

“அதனால் தான் அவளுக்குப் பிடிச்ச மாதிரி உடையணிந்து, வாரம் ஒரு தோழியோட வீட்ல சந்திப்பாங்க. இலக்கியம் பேசுவாங்க, விவாதிப்பாங்க… ஆக்கபூர்வமான சிந்தனைகளைப் பகிர்ந்துகிட்டு மனம் விட்டுச் சிரிப்பாங்க…

தடையேதும் இல்லாததால் தன்னம்பிக்கையோடு வலம் வர்றா. அவளுக்கென்று தனித்தன்மை இருக்கறதுனால எப்போதும் உற்சாகத்தோடு இருக்கறா. அரட்டையிலேயே நேரத்தை விரயம் செய்யாம பார்வையற்றவர்களுக்காக பரீட்சை எழுத உதவுவாங்க… சொல்லுங்க, இதில் கவிதா மேல் என்ன தப்பைக் கண்டுபிடிச்சாங்க?” என்று கேட்டு என் முகம் பார்த்தான்.

அதானே? என்னால் என்ன சொல்ல முடியும்? இதில் எவ்விதத்  தப்பும் இருப்பதாக எனக்குப் படவேயில்லை. கூடவே எங்கள் வளாகத்தில் இருக்கும் பெண்களில் சிலர் வேலை முடித்து, கல்லூரி முடித்து தாமதமாக வருவதும் உண்டு. அதெல்லாம் தப்பாகத் தோன்றாத மனிதர்களுக்கு கவிதா செய்வது மட்டும் எப்படி தப்பு என்று தோன்றுகிறது?

அவள் வயதினாலா? அல்லது வயது பெண்களின் தாய் என்பதாலா? அவள் அழகினாலா அல்லது அவளின் தன்னம்பிக்கையினாலா? என் மனைவி கூட அப்படித் தானே தவறாகப் பேசினாள்.

“ரகு, நாணயத்திற்கு எப்போதும் ரெண்டு பக்கம் இருக்கும் என்பதை இன்று முழுமையாகப் புரிந்து கொண்டேன். எந்த ஒரு விஷயத்திற்கும் மறுபக்கம் என்று ஒன்று இருக்கும். உங்கள் மேல் எனக்கு இப்போ நிறைய மரியாதை வந்துடுச்சு. என்னை மன்னிச்சுடுங்க” என்று முதல் முறையாக அவனிடம் இயல்பாகப் பேசினேன். அவனும் அவன் முகஇறுக்கத்தைத் தளர்த்தினான்.

வீட்டுக்குச் சென்று தமிழிடம் விஷயத்தைச் சொன்னதும், “உடனே நம்பிட்டீங்க… உங்களுக்கு இளகின மனசுங்க…” என நான் சொன்னதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

எனக்கு கோபம் எட்டிப் பார்க்க, “வேண்டாம் தமிழ்.. இதுக்கு மேலேயும் பேசி என்னைக் கோபக்காரனாக்கி விடாதே…” என்று அவளிடம் சீறினேன்.

“எனக்கு ஒண்ணும் இல்லை… இங்க இருக்கறவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?”

“அது என் பிரச்சனை… சொல்லிப் புரிய வைக்க முயற்சிப்பேன்.. முடியலையா, சூரியனைப் பார்த்து நாய் குரைச்சா யாருக்கு நட்டம்? என விட்டுவிடுவேன்” என்றேன். அதன் பிறகு தமிழ்செல்வி பேசவில்லை.

பின்னே இதற்கு மேல் அவள் என்னிடம் அதைப் பற்றி விவாதித்தால் அவள் நாயாகிப் போவாளே… என்னிடம் பேசவில்லை என்றாலும் இங்கிருக்கும் மற்ற பெண்களிடம் இதைப் பற்றி வாய் கிழியப் பேசப் போகிறாள் என்பது மட்டும் உறுதி.

ஒவ்வொரு மனிதனின் செயலுக்கும் மறுபக்கம் என்று ஒன்று இருக்கிறது என்பதை எப்பொழுது தான் அனைவரும் உணர்வார்களோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *