ஒப்பீடு

ஒப்பீடு

ஆகஸ்ட் 2014 – ஓம் சக்தி நாளிதழில் லாவண்யா பெருமாள்சாமி என்ற பெயரில் வெளியானது

என் பெயர் சுதாகர். நான் வருமான வரித்துறையில் வேலையில் இருக்கிறேன். இன்று மைதிலியைப் பெண் பார்க்க என் இரண்டு அண்ணன்கள், இரண்டு அண்ணிகள், தம்பி மற்றும் அம்மா புடைசூழ சென்றிருந்தேன்.

என்னைப் பார்த்ததும் மைதிலிக்குள் ஓர் அதிர்வு ஏற்பட்டதை அவளின் பட்டாம்பூச்சியைப் போன்று படபடக்கும் விழிகள் எனக்கு உணர்த்தின. அவள் விழிகளின் தாளத்திற்கு ஏற்ப என் இதயம் முரசு கொட்டியதை அவள் அறிய மாட்டாள்.

முதன் முதலாக மைதிலியின் சாந்தமான அழகு முகத்தைப் புகைப்படத்தில் பார்த்ததும், அவள் என்னுள் உறைந்துப் போனதாகவே உணர்ந்தேன். ஏனோ அவளிடம் உடனே பேச வேண்டும் என்று என் மனம் துடியாய்த் துடித்தது.

ஆனால் அவளுக்கு அறிமுகமில்லாத நான் நேரில் சென்று பேசினால் அத்தனை நாகரிகமாக இருக்காது. அது மட்டுமல்லாது என்னைப் பற்றின தவறான அபிப்பிராயத்தைக் கிளப்பவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் இந்தப் பெண் பார்க்கும் வைபவத்திற்குச் சம்மதித்தேன்.

மைதிலியை எனக்குப் பிடித்திருப்பதாக என் முடிவைச் சொல்லும் முன்னால் அவளுடன் நான் தனித்துப் பேச வேண்டும். அது மிகவும் முக்கியம்.

முறையாக எங்களை உபசரித்து சற்று நேரம் பேசிய மைதிலியின் வீட்டினர், காபி கொடுக்கவென மைதிலியை அழைத்தனர்.

மான்விழி மங்கை அவளின் பாதக் கொலுசுகள் சிணுங்க, பட்டுப் புடவை சரசரக்க, சூடியிருந்த மல்லிகை மணம் பரப்ப, காற்றுக்குக் கூட வலிக்குமோ என்று மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்து வந்தாள். கைகளில் வைத்திருந்த காபித் தட்டை என் முன் நீட்டியவள், என்னை ஓரக்கண்ணால் பார்த்தும் பார்க்காததைப் போன்று பார்த்தாள்.

அவளின் குறுகுறுப்புக் கள்ள பார்வை என்னை மயக்கியது. அவள் பார்ப்பாள் என்று ஊகித்து நானும் அவள் பார்வையைச் சளைக்காமல் சந்தித்தேன்.

என்னைப் பார்த்ததும் படபடக்கும் அவள் விழிகளின் மயக்கப் பார்வை எனக்கு இனித்தது. நாணத்துடன் முகம் குனிந்து கொண்டாள்.

அதன்பிறகு அவளிடம் பொதுவான விஷயங்களைப் பற்றிச் சற்று நேரம் என் வீட்டினர் பேசிவிட்டு, விரைவில் பதில் சொல்கிறோம் என மாப்பிள்ளை வீட்டு முறுக்குடன் கிளம்பிவிட்டனர்.

எனக்கு மைதிலியிடம் தனியாகப் பேச வேண்டும். அதற்காகத் தான் வந்ததே. இருந்தாலும் வீட்டினரின் பேச்சைத் தட்ட முடியாமல், அவர்கள் சொன்னதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் கிளம்பிவிட்டேன்.

என் குடும்பத்தாரை அருகில் வைத்துக் கொண்டு அவளிடம் தனித்துப் பேசவும் எனக்கு விருப்பமில்லை. அவர்களுக்குத் தான் அறிமுகமாகி விட்டோமே. இனி தனியாக வந்து பேசினால் தவறில்லை. பிறகு வந்து பேசிக் கொள்ளலாம் என்ற முடிவுடன் மைதிலியிடம் ஓர் கண்ணசைப்பில் கிளம்பிவிட்டேன்.

நான் அவளிடம் விடை பெறுவேன் என்று ஊகித்த மைதிலியும் அப்போது என்னைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் அந்த எதிர்பார்ப்பு எனக்குள் ஓர் இனிய அதிர்வை ஏற்படுத்தியது. அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம் தானே?

அவளுடன் உடனே பேசி ஓர் முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் இதயம் பரபரத்தது. நிறைய நாட்கள் காத்திருந்து, மனதில் பல ஆசைகளை விதைத்துவிட்டுப் பின்னர் அது சிதைந்து போனால் இருவராலும் தாங்கிக் கொள்ள முடியாது.

அதனால் அவளுடன் தனியே பேசிவிடலாம் என்ற முடிவுடன், அவசர வேலை இருக்கிறது என்று தம்பியிடம் சொல்லி, அன்னையை வீட்டில் விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டேன். மீண்டும் வந்து மைதிலியின் வீட்டின் முன்னால் நின்று பூட்டியிருந்த கதவைத் தட்டக் கையைத் தூக்கினேன்.

அப்போது என்னைப் பற்றிய பேச்சு தான் அவர்களின் வீட்டில் ஓடிக் கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதா அல்லது வேண்டாமா என நான் குழம்ப, தூக்கிய என் கை அந்தரத்திலேயே நின்றது.

மற்றவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பது நாகரிகமில்லை தான். ஆனாலும் ஒருவர் நம்மைப் பற்றிப் பேசும் போது மனித மனம் அந்த நாகரிகமற்ற செயலைச் செய்ய விழையுமே. அதுவும் பெண் வீட்டினர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய மனம் துடிக்குமே. அப்படித் தான் என் மனமும் துடித்தது.

“ராஜம்… மாப்பிள்ளையைப் பார்த்தா அவருக்கு நம்ம மைதிலியைப் பிடிச்ச மாதிரி தான் இருந்தது. அவரைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். எந்தக் குறையுமில்லை…” என்றார் மைதிலியின் தந்தை.

என் சட்டைக் காலரைத் தூக்கி விடத் தோன்றியது. ஆனால் வீட்டு வாசலில் நின்று கொண்டு அதைச் செய்து, யாராவது பார்க்க நேரிட்டால் அசடு வழிய வேண்டும் என்பதால் என் கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“நம்ம மைதிலியை யாருக்காவது பிடிக்காமப் போகுமா?” என்றது மைதிலியின் அன்னை.

உண்மை தான். என் மனதுக்கு அவளை மிகவும் பிடித்தது. ஆனால் முகத்தை விட அக அழகு இன்னும் முக்கியம் என்பது என் எண்ணம். அதைப் பற்றிப் பேசத் தான் நான் அங்கு வந்திருப்பதே.

“என்ன அவங்க அளவுக்கு நம்ம செய்ய முடியுமான்னு தெரியலை…” என மைதிலியின் தந்தை கவலைப்பட்டார்.

நாங்கள் எதுவும் எதிர்பார்க்கவில்லை என்று என் முடிவைச் சொல்லும் பொழுது சொல்லிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டு, கதவைத் தட்ட கையை மீண்டும் கதவருகே கொண்டு சென்றேன்.

“அப்பா…” மைதிலி தான் கொஞ்சும் குரலில் தந்தையை அழைத்தாள். என்னைப் பற்றி ஏதாவது சொல்வாள் என்ற நப்பாசையில் என் கைகளைத் தாழ்த்திக் கொண்டேன்.

“ரொம்பச் செய்ய வேண்டாம்… பக்கத்து வீட்டு ‘கலா’க்குச் செஞ்ச மாதிரி, ஒரு நூறு பவுன் நகை போட்டுடுங்க… போதுமப்பா…” என்ற மைதிலியின் பேச்சு, என் நெஞ்சில் பாறாங்கல்லைத் தூக்கி வீசியது.

‘என்ன இவள்? இத்தனைப் பேராசைப் பிடித்தவளாக இருக்கிறாள்?’ என நான் முகம் சுழித்தேன். அவள் அடுத்துப் பேசியது என்னை அப்படியே திகைக்கச் செய்தது.

“என்னம்மா சொல்லற? நம்ம சக்திக்கு அது முடியுமா?” மைதிலியின் பேச்சில் அவர் தந்தையுமே திகைத்துப் போனார் போலும்.

“அப்போ பக்கத்து வீட்டுக் கல்யாணிக்குச் செஞ்ச மாதிரி ஒரு ஐம்பது பவுனாவது போட்டுடுங்க. கூடவே கொஞ்சம் வெள்ளிச் சாமானும் வாங்கிடுங்க போதும்…” தந்தையிடம் பேரம் பேசுவதில் மைதிலி சற்று இறங்கி வந்தாள். என் மனதிலும் தான்!

பெற்றோர்களால் எவ்வளவு முடியும் என்று கூட யோசிக்காமல் இத்தனை சுயநலமாக ஓர் பெண்ணால் செயல்பட முடியுமா?

“மைதிலி… உனக்குத் தெரியாததாம்மா… அதுவும் நம்ம சக்திக்கு மீறினது தானே? நம்மால இப்ப முடிஞ்சது முப்பது பவுன் நகை தான்” மைதிலியின் தந்தையின் குரல் நடுங்கியதோ? பாவம் அவர்!

“என்னடி நீ? நம்ம வீட்டு நிலைமை தெரிஞ்சுமா இப்படிப் பேசற?” என படபடத்தார் மைதிலியின் அன்னை.

அன்னை சொன்னது மைதிலியின் காதில் கொஞ்சமும் ஏறவில்லை போலும். “உங்க சக்திக்கு அவ்வளவு தான் முடியுமா அப்பா?” எனச் சந்தேகமாகத் தந்தையிடம் கேட்டாள்.

என்ன பெண் இவள்? பெற்ற தகப்பனின் சக்தி எவ்வளவு என்று தெரியாமல் இப்படி அடாவடியாக நடந்து கொள்கிறாள் எனக் கசப்புடன் நினைத்தேன். என்னுள் உறைந்து போன அவளை என் மனதை விட்டு வெளியேற்ற அக்கணமே முடிவும் செய்தேன்.

“ஆமாம்ம்மா… அதுவே கடனை வாங்கித் தான் செய்ய முடியும்…” மைதிலியின் தந்தையின் குரல் பிசிறியது.

“உங்களால வேற எதுவும் முயற்சி செய்ய முடியாதா அப்பா?” மைதிலி அவள் தந்தையை விடுவதாக இல்லை. போதும்…

இதற்கு மேலும் அவள் பேசும் பேச்சுக்களைக் கேட்டு என் மனதிற்கு மேலும் மேலும் ஏமாற்றத்தைத் தர எனக்கு விருப்பமில்லை. இப்போது மைதிலி என் குடும்பத்துக்கு ஏற்றவள் அல்ல என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.

“இல்லம்மா…” மைதிலியின் தந்தை குரல் தழுதழுத்ததோ?

“ஏம்ப்பா, இவ்வளவு அனுபவம் இருக்கிற உங்களாலயே உங்க சக்திக்கு மீறி எதுவும் செய்ய முடியலைன்னா, தம்பிக்கு மட்டும் எப்படிப்பா அவன் சக்திக்கு மீறிப் படிக்க முடியும்?”

திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் திரும்பிய என் கால்கள் மைதிலி சொன்னதைக் கேட்டு மேற்கொண்டு அசையாமல் அப்படியே நின்றுவிட்டன.

“எப்போ பாரு பாலுவை எதிர்வீட்டுச் செந்திலோட, பக்கத்துத் தெரு ரமேஷோட, அவன் வகுப்புத் தோழன் மணியோட என ஒப்பிட்டு, ஒப்பிட்டு அவனைப் படிக்கச் சொல்லறீங்க. அவன் என்ஜினீயரிங் படிக்கலைன்னா என்னப்பா? அவனுக்கு எந்தப் பாடம் கிடைக்குதோ அதைப் படிக்கட்டுமே?”

பனிரெண்டாவது படிக்கும் மைதிலியின் தம்பி பாலு, “அக்கா…” என தழுதழுத்தது சன்னமாக என் காதுகளில் ஒலித்தது.

“நீங்க இப்படி ஒப்பிட்டுப் பேசினால் பாலுவுக்கு அவங்களைப் பார்த்தாலே வெறுப்புத் தான் வரும். அத்தோடு உங்களையும் பிடிக்காமல் போகும். அவன் முடிஞ்ச வரைக்கும் படிக்கட்டும்.

அவனும் முடிஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சுட்டுத் தானே இருக்கான். அவன் முயற்சியில மட்டும் நம்பிக்கை வையுங்க அப்பா.

அந்த நம்பிக்கையே அவனுக்குச் சாதிக்கணும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். அந்த நம்பிக்கையே அவனுக்கு ஊக்கம் தரும்… உற்சாகத்துடன் செயல்படுவான்… அதுவே அவனை நல்வழிப்படுத்தும். அவன் வாழ்க்கையில் கண்டிப்பா முன்னேறுவான்”

என் இதய மலையில் மைதிலி கடகடவென்று ஓடிச் சென்று வெற்றிக் கொடியை அசைக்க முடியாத அளவிற்கு ஆழமாக நாட்டிவிட்டாள்.

“ஒருத்தரை ஒருத்தரோடு ஒப்பிட்டுப் பார்த்துட்டே இருந்தா அப்புறம் அதில் என்ன சுயகௌரவம் இருக்குப்பா? இப்படி ஒப்பிட்டுப் பார்த்து, நம் வாழ்க்கையை வாழாமல் யாரோ ஒருத்தரின் வாழக்கையை வாழ ஆசைப்படற மாதிரியில்ல இருக்கு…

போட்டி அவசியம் தான். அதற்காக யாரையும் மட்டம் தட்டி இன்னொருத்தரைத் தூக்கி நிறுத்தறது தப்புப்பா… தம்பி அவன் இயல்பில் இருக்கட்டும்…” மைதிலியின் பேச்சு என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

என்ன பெண் இவள்? சற்று முன்னர் நான் சொன்னதற்கும் இப்போது சொல்வதற்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது. இவள் எனக்கானவள்… இவளைத் தவிர வேறு யாரும் எனக்கு மனைவியாக வர முடியாது என்ற மாற்ற முடியாத முடிவுக்கு வந்தேன்.

என் அன்னையைப் பற்றித் தான் மைதிலியிடம் பேச வேண்டும் என்று நான் திரும்பி வந்ததே… கணவனை இழந்து, கனவுகளைத் தொலைத்து வாழும் என் அன்னையை,

‘ஏன் உங்கள் அண்ணன் வீட்டில் வசதியாக இருக்காங்களே, அவங்க வைச்சுப் பார்க்கட்டுமே…’ என்றும், ‘ஏன் உங்கள் தம்பி தனியாகத் தான் இருக்கிறாரே அவருக்கு செலவு கம்மி தானே? அவர் வீட்டில் வைத்துக் கொள்ளலாமே’ என என் இரு அண்ணிகள் பந்தாட, என் அண்ணன்களும் தலையாட்டிப் பொம்மைகளாக மாறித் தலையாட்டினார்கள்.

அப்போதே நான் முடிவு செய்தது தான். எனக்கு மனைவியாக வருகிறவள் என் அன்னையை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அவரைப் பந்தாடக் கூடாது என்று. ஆனால் மைதிலி இப்போது பேசுவதைக் கேட்டதும் என் நெஞ்சில் கனத்து உருண்டு கொண்டிருந்த கவலை மூட்டை, இலவம் பஞ்சு மூட்டையாக மாறி பறக்க ஆரம்பித்தது.

என் எண்ணத்தைப் பற்றி அவளிடம் நான் பேசவே தேவையில்லை. என் அண்ணிகளைப் போல் மற்றவர்களை ஒப்பிட்டு என் அன்னையை ஒதுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்துவிட்டாள் மைதிலி…. கூடவே காதலையும் சேர்த்து. .

மனதில் பீறிட்டுப் பொங்கும் உவகையுடன் மைதிலியின் வீட்டுக் கதவைத் தட்ட மூன்றாவது முறையாகக் கையை உயர்த்தி, இம்முறை வெற்றி கொண்டேன். என் சம்மதத்தையும் சொன்னேன்!
****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *