தேர்வு

தேர்வு

உறவுகள் (மே 2014) நாவலிலிருந்து…

இரவெல்லாம் கண்விழித்து
படித்ததை நினைவில் வைத்து
‘படித்தது மட்டுமே வரவேண்டும்’,
எனும் மந்திரத்தை உதடுகள் உச்சரித்து
தேர்வெழுதச் செல்லும் அதிகாலை நேரம்!

வினாத்தாளைத் தொடாமல் கண்கள் வெறிக்க,
விடைத்தாளைப் பட்டும் படாமல் பேனா முத்தமிட
மூளையோ விடாமல் சண்டித்தனம் செய்ய
தேர்வெழுதும் படபடப்பான நேரம்!

தேர்ச்சிபெற தெய்வங்களை வேண்டி
லஞ்சம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து
‘இனிமேல் உடனுக்குடன் படிக்கணும்’,
எனும் உறுதிமொழியை நெஞ்சில் தரித்து
தட்டுத் தடுமாறி தெரிந்ததை இட்டு நிரப்பி
தேர்வெழுதி வரும் பொன்னான நேரம்!

தேர்வெழுதி முடித்து வெளியில் வந்தால்,
வாக்குறுதி தண்ணீரில் எழுதிய எழுத்துக்களாய் கரைய
உறுதிமொழியும் திக்குத் தெரியாமல் தொலைய
நண்பர்களுடன் கலகலப்பாக காலம் விரையும்!
உறுதிமொழியும் வாக்குறுதியும் நினைவில் வரும்
மறுமுறை தேர்வெழுதும் நேரத்தில்!

Leave a Reply

Your email address will not be published.