என்னைப் பற்றி…

வாய்மொழியாக நம் எண்ணங்களை, உணர்வுகளைப் புரிய வைப்பதை விட எழுத்தின் மூலம் அதைப் புரிய வைப்பது எளிது என்பதை நம்புபவள் நான். படிப்பு, வேலை எனத் தொடர்ந்து பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு இவற்றிலிருந்து இளைப்பாற சந்தர்ப்பம் வாய்த்தது. அப்படி இளைப்பாறிய நேரத்தில் தான் கதை எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது.

ரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் தீவிர ரசிகையான நான் பள்ளி நாட்களிலிருந்தே கவிதை என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருப்பேன். பள்ளி, கல்லூரி நாட்களில் பரீட்சையின் போது பேப்பர், பேப்பராக வாங்கி எழுதிய அனுபவமும், அணு மற்றும் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் வாங்க பக்கம் பக்கமாக ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய அனுபவமும் சேர்ந்து தான் கதை எழுதும் எண்ணம் தோன்ற காரணங்கள்.

காதலின் சாரலிலே என்ற கதையை விளையாட்டு போல் சீரியல் ஸ்டோரியாக ‘அமுதா’ என்ற ப்ளாகில் எழுத ஆரம்பித்தேன்… வாசகர்கள் ஆதரவளித்து என்னை ஊக்குவித்ததன் விளைவாக இன்று பதினோரு கதைகளை எழுதியிருக்கிறேன். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

அங்கிருந்து ஆரம்பித்த பயணம் இன்று வரையிலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இல்லாவிட்டாலும் நத்தை வேகத்தில் போய்க் கொண்டு தான் இருக்கின்றது.  நட்புகளின் வட்டமும் பெருகிக் கொண்டிருக்கிறது.

அருணோதயம் அருணன் ஐயா, விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா, மற்றும் என் மாமா ஜெகநாதன் அவர்கள் அனைவரும் எனக்குத் தரும் ஊக்கத்தினால் இதுவரையில் 11 புத்தகங்கள் அருணோதயம் பதிப்பகம் வழியாகத் திருமதி. லாவண்யா என்ற பெயரில் வெளிவந்துவிட்டன.

அத்துடன், என் தோழிகள் சரளா, மற்றும் அரசி சாட்டை எடுத்து அடிக்காத குறையாக என்னை கதை எழுத தூண்டுபவர்கள். அப்படி எழுதிய கதைகளைப் படித்து நான் திருத்திக் கொள்வதற்கு நிறை குறைகளைச் சுட்டிக் காட்டும் அரசி, சரளா மற்றும் இலக்கியா என்ற பெயரில் கதை எழுதும் வைதேகி ஆகியோருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வாசகர்களான உங்கள் ஆதரவு வேண்டி என் எழுத்துப் பணியைத் தொடர்கிறேன்.

என்றும் அன்புடன்,

லாவண்யா.