உயிர்த்துளி உன்னில் சங்கமம்

உயிர்த்துளி உன்னில் சங்கமம்

Chillzee.in 2016 சிறுகதைப் போட்டிக்காக எழுதியது…

ஜனனியை வேறொரு இளைஞனுடன் கண்டதும் நந்தகுமாரின் மனம் வேண்டாத எண்ணங்கள் அனைத்தைச் சுற்றியும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. கெட்ட எண்ணங்களின் ஆதிக்கம் கூடக் , கூட மதியின் பகுத்தறியும் திறன் வலுவிழந்து கொண்டிருந்தது.

அதன் பலனாக மனம் நிலைகொள்ளாமல் தவிக்க, கையிலிருந்த அவன் இரண்டு சக்கர வாகனம் தடுமாறியது. ‘ச்சே… இன்னும் இரண்டு வாரங்களில் கல்யாணத்தை வைத்துக் கொண்டு எத்தனை எளிதாக அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்’ என முணுமுணுத்த நந்தகுமார், அந்த சிக்னல் தாண்டி ஓர் கடையின் முன்னால் நிறுத்தினான்.

ஓர் பாட்டில் குளிர்ந்த தண்ணீர் வாங்கிக் குடித்தவனின் உள்ளக் கொதிப்பு சற்றும் அடங்கவில்லை. ‘ஒரு மாதமாக நான் இவளை நினைத்துக் கனவு கண்டு கொண்டிருந்தால் இவளோ வேறொருவனை நினைத்துக் கொண்டிருக்கிறாள்…’ என எண்ணியவாறே மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கிச் செலுத்தினான்.

வழிநெடுகிலும், ‘என்னை ஏமாற்றத் திட்டம் போட்டவளைச் சும்மா விடக் கூடாது… ஏதாவது செய்ய வேண்டும்… அதை அவள் வாழ்நாள் முழுமைக்கும் மறக்கக் கூடாது…’ என ஏமாந்த நெஞ்சம், பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்தது.

வண்டியை நிறுத்திவிட்டு தன் வீட்டுக்குள் சென்றவனை அவன் தங்கையின் குரல் கட்டிப் போட்டது.

“நீ என்ன சொன்னாலும் என் அண்ணன் அதை நம்ப மாட்டார்… இவ்வளவு ஏன், உன்னோட என்னைச் சேர்த்து வைத்துப் பார்த்தாலும், தீர விசாரித்துத் தான் ஓர் முடிவுக்கு வருவார்…

அப்படி இருக்கறப்போ நான் உன்னை லவ் பண்ணினேன் எனப் பொய் சொன்னா உடனே நம்பிடுவாரா?” என யாரிடமோ அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தாள் தங்கை ஆர்த்தி.

‘தங்கை சொல்வது எத்தனை உண்மை? தங்கை தப்பு செய்துவிட்டாள் என யார் சொன்னாலும் அவன் நம்பமாட்டான். எங்கிருந்து அவள் மேல் அப்படி ஓர் நம்பிக்கை வந்தது? என் வீட்டுப் பெண் என்பதால் உண்டான நம்பிக்கையா?

ஜனனி வேறொரு வீட்டுப் பெண் என்றதும் உடனே அவள் மேல் கெட்ட சாயம் பூச வீராவேசமாக கிளம்பிவிட்டேனே… ச்சே… ச்சே… என்னவொரு கீழ்த்தரமான எண்ணம்?’ எனத் தன்னை நினைத்தே வெட்கம் கொண்டான் நந்தகுமார்.

‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பதை எத்தனை எளிதாக மறந்து போனான்.

அதை நன்கு உணர்த்திய தங்கைக்கு மனதில் நன்றி சொல்லிவிட்டு, ஜனனியிடம் அவள் ஓர் இளைஞனுடன் சென்றதைப் பற்றி விசாரிக்கலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தான்.

முதலில் தங்கை காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருக்கும் பிரச்சனையைப் பார்ப்போம் எனப் பட்டென்று ஆர்த்தியின் கையிலிருந்த அலைபேசியைப் பறித்து, ஸ்பீக்கரில் போட்டான்.

எதிர்முனையிலிருந்தவன், “நீ இப்போ என் காதலுக்கு ஒத்துக்கலை நான் தற்கொலை பண்ணிப்பேன்… அதற்குக் காரணம் ‘நீ’ன்னு லெட்டர் எழுதி வைத்துவிடுவேன்…” என மிரட்டிக் கொண்டிருந்தான்.

“அப்படியா? சந்தோஷம்… எப்போ தற்கொலை செய்யப் போற?” என நந்தகுமார் கேட்க, திடீரென்று ஒலித்த ஆண் குரலில் “அது சார்… வந்து…” என மறுமுனையில் இருந்தவன் திக்கித் திணறினான்.

அதுவரையில் இருந்த வீராவேசம் எல்லாம் வடிந்து போனது அவனுக்கு.

“ஏண்டா… ஒரு பொண்ணுக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சதும் விலகிக்க மாட்டீங்களா? நீ இப்போப் பேசியதை எல்லாம் என் செல்போன்ல பதிந்து வைத்திருக்கேன்… இனிமேல் என் தங்கையை ஏதாவது தொல்லைப்படுத்தின… அப்புறம் போலீஸ்ல சொல்ல வேண்டி வரும்… ஜாக்கிரதை…” என நந்தகுமார் மிரட்டவும் மறுமுனையில் இருந்தவன் பம்ப ஆரம்பித்தான்.

“இல்லைங்க சார்… தெரியாமல்… இனிமேல் பண்ணமாட்டேன்…” எனத் தொடர்ப்பைத் துண்டித்தான்.

“அண்ணா…” எனத் தயங்கியவாறே நந்தகுமாரின் முன்னால் ஆர்த்தி வந்து நிற்க, “இதை ஏன் என்கிட்டே சொல்லலை?” என முறைத்தான்.

“அது அண்ணா, கல்யாண நேரத்தில் உங்களுக்கு டென்ஷன் வேண்டாம் என நினைத்தேன்… சாரி அண்ணா…” என இழுத்தாள் தங்கை.

“இனிமேல் அவன் தொந்தரவு பண்ணினாச் சொல்லு… போலீஸ்ல சொல்லிடலாம்… என் செல்ஃபோன்ல நிஜமாவே அவன் பேசியதைப் பதிவு செய்திருக்கிறேன்…” எனத் தங்கையிடம் அதைப் போட்டுக் காட்டினான் நந்தகுமார்.

“அண்ணன்னா என் அண்ணன் தான்… நீங்க இருக்கறப்போ எனக்கு எந்தக் கவலையுமில்லை…. தேங்க்ஸ் அண்ணா…” எனக் குதூகலத்துடன் சொன்னவள்,

“இந்த வெள்ளிக்கிழமை ஜவுளி எடுக்கப் போகணும்… அதனால் வேலைக்கு லீவு போடச் சொல்லி ஞாபகப்படுத்தச் சொன்னாங்க அம்மா….” என்றாள்.

அவர்களின் பெற்றோர்கள், உறவில் பத்திரிக்கை வைப்பதற்கு அன்று காலையில் தான் வெளியூர் சென்றிருந்தனர்.

தங்கை சொன்னதைக் கேட்டதும், மீண்டும் ஜனனியை வேறொருவனுடன் பார்த்த அந்தக் காட்சி நந்தகுமாரின் மனக் கண்ணில் ஓடியது. எது எப்படி என்றாலும் இதை உடனே தெளிவுபடுத்திவிட வேண்டும்.

ஆனால் அதிலும் ஓர் சிக்கல். ஜனனியை எப்போது அழைத்தாலும் வேலையில் ‘பிசி’ என்ற பதில் தருவாள். இல்லையென்றால், அழைப்பை ஏற்று ஒன்றிரண்டு வார்த்தைகள் மேலோட்டமாகப் பேசிவிட்டு, “அப்புறம் பேசறேன்…” என வைத்துவிடுவாள்.

ஆனால் இதுவரையில் அவளாக நந்தகுமாரை அழைத்தது இல்லை. அதெல்லாம் வெட்கம் என அவனாகப் பெயர் சூட்டிக்கொண்டது அவனது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்.

இனிமேல் அப்படி ஊகங்களுக்கு இடம் தராமல் நேரில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் மறுநாள் மதியம் ஜனனியின் அலுவலகத்தில் போய் நின்றான் நந்தகுமார்.

சொல்லாமல் கொள்ளாமல் பணியிடத்தில் நந்தகுமார் அப்படி வந்து நிற்பான் என ஜனனி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அது மட்டுமல்லாமல் நந்தகுமாரைப் பார்த்த, அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்கள் வேறு, “யாருடி இது? ஆளு ஹேன்ட்சம்மா இருக்கார்..” எனக் கேட்டு அவளைத் திணற வைத்தனர்.

ஜனனி பதில் சொல்லத் தடுமாறுவதைப் பார்த்த நந்தகுமார், “நண்பன்” என்று மட்டும் சொல்லி அனைவரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ஒருவிதத் தவிப்புடன் நின்றிருந்த ஜனனியைப் பார்த்து, “கொஞ்சம் தனியாப் பேசணும்…” என்றான் நந்தகுமார்.

“அது.. இப்போ.. பிஸியா…” என ஜனனி சன்னக் குரலில் ஆரம்பிக்க, “நீங்க வேறொருத்தரோட வண்டியில் போனதை நேற்றுப் பார்த்தேன்…” எனப் பார்த்த இடத்தையும், நேரத்தையும் நந்தகுமார் சொல்ல, ஜனனிக்கு உள்ளூர உதறலெடுக்க ஆரம்பித்துவிட்டது.

அத்துடன் தன்னை இதுவரையில் ஒருமையில் அழைத்துக் கொண்டிருந்தவன் இப்போது பன்மைக்குத் தாவிவிட்டான். அப்படியென்றால் ஓரளவுக்கு விஷயத்தை ஊகித்திருப்பான். இனி மறைப்பதில் பயனில்லை எனத் தோன்றியது ஜனனிக்கு.

“இனியும் பிஸின்னு சாதிக்கப் போறீங்களா ஜனனி? பேசியே ஆகணும்… இப்போ என் நிலை என்ன என எனக்குத் தெரியணும்…” என்றான் நந்தகுமார் அவள் கண்களை ஊடுருவி.

அதற்கு மேல் மறுப்புத் தெரிவிக்காமல், “இதோ வரேன்,…” என அலுவலகத்தினுள் சென்று அனுமதி வாங்கிக் கொண்டு வந்தாள் ஜனனி.

அவள் அலுவலகத்துக்கு எதிரேயுள்ள உணவகத்துக்குச் செல்லும் வரையில் நந்தகுமார் எவ்விதப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. ‘இனி என்ன ஆகுமோ?’ எனத் தட தடக்கும் இதயத்துடன் அவனைப் பின் தொடர்ந்தாள் ஜனனி.

உள்ளே சென்று அமர்ந்த நந்தகுமார், அவளுக்குப் பிடித்த உணவு எது எனக் கேட்டு அங்கு வந்த பணியாளரிடம் சொல்லிவிட்டு, “சொல்லுங்க… என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?” என்றான் நந்தகுமார்.

“வந்து… எதைப் பத்தி?” எனக் கேட்ட ஜனனி தானாக எந்த விஷயத்தையும் கொட்ட முன் வரவில்லை.

“கல்யாணத்துக்கு முன்னாடி நாள் ஓடிப் போகலாம் எனத் திட்டம் போட்டிருக்கீங்களா?” என்ற நந்தகுமாரின் நேரடித் தாக்குதலில் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள் ஜனனி.

அவள் அமர்ந்திருந்த நிலையே அவள் அதைத் தான் முடிவு செய்திருக்கிறாள் என்பதைக் காட்ட , “இதைப்பத்தி சம்மந்தப்பட்ட என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லணும் எனத் தோணலையா?” எனக் குரல் உயர்த்திக் கேட்டான் நந்தகுமார்..

திடீரென்று ஓங்கி ஒலித்த குரலில் அங்கிருந்தவர்கள் சிலர் அவர்களைத் திரும்பிப் பார்க்க, “எ.. எல்லோரும் பார்க்கிறாங்க…கொ… கொஞ்சம் மெதுவா…” என்றாள் ஜனனி.

“ம்ம்ம்..” என விரக்தியாகப் புன்னகைத்த நந்தகுமார், “இங்கே ஒண்ணு ரெண்டு பேர் பார்க்கிறதுக்கே உங்களுக்குச் சங்கடமா இருக்கே, நாளைக்கு நீங்க பண்ணப்போற காரியத்துக்காக எத்தனை பேர் எத்தனை விதமாப் பேசுவாங்க… அதை யோசிச்சுப் பார்த்தீங்களா?” என்றான்.

பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்து, “நீங்க பண்ணப்போற காரியத்தால் என் குடும்பம் பாதிக்கப்படும் என்கிற எண்ணம் கொஞ்சமாவது உங்களுக்கு இருந்ததா?” என நந்தகுமார் கேட்க, இப்போது ஜனனிக்கு கண்கள் கரித்தது.

தான் அவனுக்குச் சொந்தமாகப் போவதில்லை என்று தெரிந்தும் காட்டுக் கத்தல் கத்தாமல், அவளுக்கு மரியாதை தந்து பேசுபவனைப் பார்த்த ஜனனிக்கு மனம் நிலைகொள்ளவில்லை.

அவளைத் திட்டியிருந்தால் அவள் செய்யவிருந்த காரியத்துக்குக் கிடைத்த தண்டனை என்று மனம் ஆறியிருக்கும். ஆனால் இவனோ இப்படி அமைதியாகப் பேசிக் கொண்டிருக்கிறானே.

அத்தோடு நந்தகுமார் கேட்டதைப் போல் அவள் இதையெல்லாம் யோசிக்காமல் இல்லை. நந்தகுமாரிடம் சொல்லி உதவி கோரலாம் என்று அவள் காதலன், பிரதீப்பிடம் சொல்லிப் பார்த்தாள்.

ஆனால் அவனோ, ‘இப்படிப் பாவம் பார்த்தால் பிறகு நாம் இந்த ஜென்மத்தில் ஒன்று சேர முடியாது… விஷயம் வெளியில் தெரிந்து அவன் பிரச்சனை செய்தால், அப்புறம் உன் வீட்டுக்கும் தெரிந்துவிடும்…’ என அவளை அமைதிப்படுத்திவிட்டான்.

அவள் காதல் கைகூடுவதற்காகத் திட்டம் போடும் போது தோன்றாத வேதனை அந்த நிமிடத்தில் அவள் மனதில் தோன்ற, ஜனனிக்கு அழுகை பொங்கியது.

“ப்ளீஸ் அழாதீங்க… இப்படியெல்லாம் பேசி உங்க மனச மாத்த வரலை நான்… ஏதோ என் ஆதங்கம்… முன்னாடியே சொல்லி இருந்தா வேற மாதிரி முடித்திருக்கலாம்…” என ஆதங்கப்பட்டான் நந்தகுமார்.

“சாரி….” என ஜனனி விசும்பலுக்கிடையில் சொல்ல,

“ப்ச்… உங்களைப் பத்தி என் மனதில் கனவுகளை விதைக்காமல் இருந்திருப்பேன்… இப்போ அந்தக் கனவுகள் கலைந்து போனதில் ஏமாற்றம்… கொஞ்சமே கொஞ்சம் இங்கே வலிக்குது…” என இதயம் இருக்கும் இடத்தைத் தட்டிக் காட்டினான்.

“நான் வேணும் என….” என ஜனனியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

“இட்ஸ் ஓகே… கொஞ்ச நாள்ல இதைக் கடந்து வந்திடுவேன்… சரி, மார்கெட்ல இருக்கிற ஒரு புதுக் கார் பெயர் சொல்லுங்க…” என்றான் நந்தகுமார்.

திடீரென்று அப்படிக் கேட்டதும் ஜனனி திகைத்து விழிக்க, “சும்மா சொல்லுங்க… அந்தக் கார் வாங்கித் தந்தா தான் கல்யாணம் என உங்க வீட்டில் மிரட்டப் போகிறேன்… எப்படி?” எனச் சிரித்த நந்தகுமாரைப் பார்த்து அவளின் மனம் கனத்துப் போனது.

“உங்க வீட்டில் பேசறேன்… அங்கே என்ன ரியாக்ஷன் என நீங்க தான் எனக்கு அடிக்கடித் தகவல் சொல்லணும்… அதற்கேற்பத் தான் நான் திட்டம் போடணும்..” என்ற நந்தகுமார், பணியாளரை அழைத்து உணவுக்கான பணத்தைச் செலுத்தினான்.

பின்னர், “நேரமாகுது… நான் கிளம்பறேன்… உங்க வீட்டில் சம்மதம் வாங்கி, அவங்க ஆசிகளோடக் கல்யாணம் பண்ணிக்கோங்க… ஆல் த பெஸ்ட்…” என விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான் நந்தகுமார்.

“நந்தா…” என முதல் முறையாக அவன் பெயரைச் சொல்லி அழைத்த ஜனனி, “ரொம்பத் தேங்க்ஸ்… உங்களுக்கு மனைவியா வரப் போற பொண்ணு ரொம்பக் கொடுத்து வச்சவங்க’…” என்றாள்.

அதைக் கேட்டு கலகலவென்று சிரித்த நந்தகுமார், “ஆனால் அது நீங்களா இல்லாமல் போயிட்டீங்களே…” என்றவன், ஜனனியின் முக மாறுதலைப் பார்த்து,

“ஹே… சும்மா ஜோக்குக்கு சொன்னேன்… ஆனால், இது தான் நீங்க நீளமா என்கிட்டே பேசிய முதல் வாக்கியம்…” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

உடனே பிரதீப்பை அழைத்த ஜனனி நடந்ததைச் சொல்ல, இவள் நிம்மதி அடைந்ததைப் போல் அவன் நிம்மதி அடையவில்லை.

“அவன் சொன்ன மாதிரி கல்யாணத்தை நிறுத்தினாலும் நம் காதலை எப்படி உன் வீட்டில் ஒத்துக்குவாங்க…? அதனால் நம் திட்டப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றான் பிரதீப்.

“அதில்லை பிரதீப்… இன்னும் கொஞ்சம் டைம் இருந்தா எப்படியாவது பேசி அப்பா-அம்மாவைச் சம்மதிக்க வச்சிடுவேன்…” என்றாள் ஜனனி.

“நம்ம ‘பிளான்’ படி கல்யாணம் பண்ணிக்கிறோம்… அவ்வளவு தான்…” என அவன் திட்டவட்டமாகச் சொல்ல, “ப்ளீஸ் பிரதீப்…” என்றாள்.

“ ப்ளீஸ் ஜனனி, ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற? உன்னை யாருக்கும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது…” என்றான்.

“ம்ம்ம்.. சரி…” என அரைமனதாகச் சம்மதித்தாலும் உள்ளம் ஏனோ நிலை கொள்ளவில்லை ஜனனிக்கு.

கைப்பையை எடுத்துக் கொண்டு மீண்டும் தன் அலுவலகத்தை நோக்கி ஜனனி நடக்க, அலுவலகத்தை ஒட்டியிருந்த கடைக்கு முன்னால் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.

‘நின்னுட்டு இருந்தவன் மேலே மோதிட்டுப் போயிட்டான் அந்தக் கடங்காரன்… தண்ணியைப் போட்டுட்டு கண்டபடி லாரியை ஓட்டறது…’ எனக் கடந்து சென்றவர்கள் பேசியது அவளது காதில் விழுந்தது.

‘ஏதோ ஆக்சிடென்ட் போல… ஐயோ பாவம்’ என ஜனனியால் பரிதாபம் மட்டுமே பட முடிந்தது. அதற்குமேல் கவலைகொள்ள முடியாமல் வேலை அழைக்க, உள்ளே சென்றாள்.

சற்று நேரத்தில் ஜனனியின் கைப்பேசிக்கு அவள் தந்தை, பசுபதி அழைத்து, “ஜனனி, உடனே கிளம்பி ‘டூலிப்’ மருத்துவமனைக்கு வாம்மா… மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடென்ட்…” என்றார்.

அதைக் கேட்ட ஜனனிக்கு தலை ‘கிர்ரென்று’ சுழன்றது. சற்றுநேரத்துக்கு முன்னால் நன்றாக இருந்தானே? தன் கண் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தானே.

“அ..அப்பா… உ…உயிருக்கு ஒ… ஒண்ணும் ஆ…ஆபத்தில்லையே….” எனத் திக்கித் திணறிக் கேட்பதற்குள் அவளையும் அறியாமல் கன்னத்தில் கண்ணீர் மளமளவென்று இறங்க ஆரம்பித்துவிட்டது.

“தெரியலைடா… இப்போ தான் சம்மந்தி விஷயத்தைச் சொன்னாங்க… நான் அம்மாவைக் கூட்டிட்டு நேரா அங்கே வரேன்” என அவசரமாக அழைப்பை வைத்துவிட்டார் பசுபதி.

அவளுக்கு உடனே அங்கே ஓட வேண்டும் போல் தோன்றியது. ஆனால் இருக்கும் பதட்டத்தில் அவளால் வண்டியை ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை. அதனால் ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குச் சென்றால், நந்தகுமாரின் மொத்தக் குடும்பமும் அங்கே அழுகையில் கரைந்து கொண்டிருந்தது.

“அத்தை…” என ஜனனி சொன்னது தான் தாமதம், ‘ஓ’வென்று பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்துவிட்டார் நந்தகுமாரின் அன்னை. சொல்ல வந்த தேறுதல் வார்த்தைகள் அவளது தொண்டைக் குழியில் சிக்கித் தவிக்க, ஜனனியின் பெற்றோர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களைப் பார்த்த நந்தகுமாரின் தந்தை, “காந்தி ரோட்ல ஏதோ ஒரு கடை முன்னாடி நின்னுட்டு இருந்தப்போ, சைட்ல வந்த லாரிக்காரன் இடிச்சுட்டுப் போயிட்டான்… கீழே விழுந்ததில் தலையில் நல்ல அடி…” எனக் கண்ணீருக்கிடையில் சொல்ல,

“என் பையன் யாருக்குமே கெட்டது நினைக்க மாட்டானே… அவனுக்குப் போய் இப்படி ஒரு நிலைமையா?” எனக் கதறினார் நந்தகுமாரின் அன்னை.

அவர்கள் சொன்னதைக் கேட்ட ஜனனியின் கால்கள் துவண்டன. பொத்தென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள் குலுங்கி அழ ஆரம்பித்தாள். அந்த காந்தி சாலை அவள் அலுவலகம் இருக்கும் சாலை.

‘சற்றுநேரத்துக்கு முன்னால் உணவகத்தில் இருந்து அவள் வெளியில் வந்த பொழுது பார்த்த மக்கள் கூட்டம், இவனைச் சுற்றித் தான் நின்று கொண்டிருந்ததா ?’

‘உன் விஷயம் குறித்துப் பேச வந்ததால் தான் இப்படி விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். நீயானால் விபத்தில் அடிப்பட்டவனைக் கண்டு கொள்ளாமல் வேலை என்று சுயநலமாகச் செயல்பட்டிருக்கிறாய்…’ என அவள் மனசாட்சி அவளைக் குற்றம் சாட்டியது.

அப்போது அங்கே வந்த மருத்துவர், ‘அவர் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை… ஆனால் அவருக்குச் சுயநினைவு திரும்புமா, இல்லை, அப்படியே கோமாவில் இருப்பாரா என 24 மணிநேரம் போனாத் தான் தெரியும்’ என்றார்.

நந்தகுமாரின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற விஷயம் அங்கிருந்தவர்களின் மனக் காயத்துக்கு மருந்திட்டாலும், அவனுக்கு சுயநினைவு திரும்பினால் மட்டுமே அது முழுதாக ஆறும்.

ஆனால் இருபத்திநாலு, நாற்பத்தி எட்டு, எழுபத்தி இரண்டு, தொண்ணூற்று ஆறு மணி என நேரம் கடந்து போனாலும் நந்தகுமாரின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

நான்கு நாட்களாக வேலைக்குச் செல்லாமல் மருத்துவமனையே கதி என்று கிடந்த ஜனனியின் நிலையைப் பார்த்த அவள் பெற்றோருக்கு வயிறு கலங்கியது. தங்கள் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடுமோ என அஞ்சினர்.

அதனால் அன்றிரவு ஜனனி படுக்கப் போவதற்கு முன்னால், “ஜனனி, மாப்பிள்ளைக்கு எப்போ சுயநினைவு வரும் எனச் சொல்ல முடியாது… நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நடந்தது. அதனால் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம் என நானும் அம்மாவும் முடிவு பண்ணியிருக்கிறோம்…” என்றார் பசுபதி.

அவள் விரும்பாத திருமணம் தான். விருப்பப்பட்டு ஏற்பாடு செய்த அவள் தந்தையே இத்திருமணத்தை நிறுத்திவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஜனனியால் மகிழ முடியவில்லை.

தந்தை சொல்வது காதில் கேட்டாலும், பதில் சொல்லாமல் வெற்றுப் பார்வை ஒன்றை வீசிவிட்டுத் தன்னறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

“என்னங்க இவ, இப்படி இருக்கா?” என ஜனனியின் அன்னை பார்வதி கலக்கத்துடன் கேட்க,

“சின்னப் பொண்ணு தானே.. கொஞ்ச நாள்ல சரியாயிடுவா… நம்ம முடிவு சரின்னு ஏத்துக்குவா…” என்றார் பசுபதி.

பசுபதி மகளிடம் சொன்னவாறே நந்தகுமாரின் பெற்றோர்களை அழைத்து, ‘இந்தத் திருமணம் நடக்காது’ எனச் சொல்ல, “அவசரப்படாதீங்க….” என்றனர் அவர்கள்.

“உங்க மகளுக்கு இப்படி ஓர் நிலைமை வந்தா இப்படிப் பேசுவீங்களா?” எனக் கேட்டு பசுபதி அவர்களின் வாயை அடைத்துவிட்டார்.

நந்தகுமாரின் பெற்றோர்களால் அதற்குமேல் என்ன சொல்ல முடியும்? மகனின் நிலை குறித்து மேலும், மேலும் கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது.

மேலும் ஒரு ஆறு நாட்கள் கடந்து செல்ல, ஜனனியை அழைத்த பிரதீப், அவர்களின் திருமணத் திட்டத்தைப் பற்றிச் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டான்.

அவன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்ட ஜனனி, “பிரதீப், நேர்ல பேசணும்…” என்றவள், அவள் எப்போதும் செல்லும் கோவிலுக்கு அவனை வரச் சொன்னாள்.

சொன்ன நேரத்துக்கு வந்த பிரதீப்பை ஓர் தூணுக்கு அருகில் அமரச் சொன்னவள், தானும் அமர்ந்து கொண்டாள்.

“நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டு உனக்குக் கோபம் வரலாம்… ஆனால் நான் எடுத்திருக்கும் இந்த முடிவினால் எனக்குக் கிடைக்கப் போகும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் வேறெந்த முடிவாலும் தர முடியாது..” எனப் பீடிகையுடன் ஆரம்பித்தாள் ஜனனி.

“என்ன சொல்ல வர்ற… நேரடியாச் சொல்லு…” எனப் பிரதீப் சொல்ல, “நம்ம கல்யாணம் வேண்டாம்…” என்றாள்.

“இதைத் தானே அடிக்கடி சொல்லிக் கடுப்பேத்தற… இரண்டு நாள்ல நம்ம கல்யாணத்தை வச்சுக்கிட்டு இன்னும் உன் வீட்டில் சம்மதம் வாங்கித் தான் கல்யாணம் பண்ணனும் என ஏன் பிடிவாதமா இருக்க?” என எரிச்சலுடன் கேட்டான் பிரதீப்.

“ஆமா… அவங்க கண்டிப்பாச் சம்மதிப்பாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு… ஆனால் நீ நினைக்கிற மாதிரி உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இல்லை… நந்தகுமாரை…” என்றாள் ஜனனி.

“என்ன உளர்ற? அவனுக்கு அடிபட்டதில் உனக்கு மூளை பிசகிடுச்சா?” எனக் கோபத்தில் வெடித்தான் பிரதீப்.

பின்னே கடந்த இரண்டு ஆண்டுகளாக உருகி, உருகிக் காதலித்தவளின் வாயில் இருந்து இப்படி ஓர் வாக்கியம் வெளிவந்தால் அவனுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்?

“ப்ளீஸ் பிரதீப்… நான் சொல்லப் போறதை நிதானமாக் கேளு… நந்தகுமார் சந்தோஷமா வேறொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா நானும் நிம்மதியா உன்னைக் கல்யாணம் செய்திருப்பேன்… சந்தோஷமாகவும் வாழ்ந்திருப்பேன்…”

“அடிபட்டதில் அவன் மேலே பரிதாபம் வந்துடுச்சா?” பிரதீப்புக்கு இன்னும் எரிச்சல் குறைந்தபாடில்லை.

“ம்ம்ஹூம்… பரிதாபம் இல்லை… அவர் மேலிருக்கும் நல்ல அபிமானம்… ஒரு நல்ல உள்ளத்தின் மேல் வைத்திருக்கும் மதிப்பு… அவருக்குத் துரோகம் பண்ணப் போறேன்னு தெரிஞ்சும் எனக்கு உதவ முன் வந்தாரே… அதற்குத் தரும் மரியாதை…

உண்மையைச் சொல்லு, அவர் சூழ்நிலையில் நீ இருந்திருந்தா அந்தப் பொண்ணுக்கு உதவியிருப்பியா?” எனக் கேள்வியாகப் பிரதீப்பைப் பார்த்தாள் ஜனனி.

அவன் மறுப்பாகத் தலையசைக்க, “நடக்கவிருக்கும் விபத்தை யாராலும் தடுக்க முடியாது பிரதீப்… ஆனால் என்னைப் பார்க்க வந்தப்போ தான் அவருக்கு அந்த விபத்து ஏற்பட்டது. அது வாழ்க்கை முழுக்க என்னைத் துரத்தும்…” என ஜனனி சொல்ல,

“அப்போ நீ என் மேலே வைத்திருந்த காதல் எல்லாம்….” என பிரதீப் அவளை ஊடுருவ,

“அது உண்மையான காதல் தான்… காதல் சுயநலமானது என எல்லோரும் சொல்லுவாங்க… ஆனால் என்னைப் பொறுத்தவரை காதல் சுயநலமில்லாதது… காதலுக்கு அடிப்படை அன்பு.

அந்த அன்பு இருக்கிறதால் தான் என்னால் உன்னைக் காதலிக்க முடிந்தது. அதே அன்பினால் தான் நந்தாவை இந்த நிலையில் அப்படியே விட்டுவிட்டு சுயநலமாக யோசிக்க முடியவில்லை” என்றாள்.

“நீ பேசறது சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு ஜனனி… எவ்வளவு பணம் வேணும் சொல்லு… அவன் வைத்தியதுக்கு நான் கொடுக்கிறேன்…” எனப் பிரதீப் சொல்ல,

“இது பணத்தால் தீர்க்கக் கூடிய பிரச்சனை இல்லை பிரதீப்.. பாசத்தால், அன்பால் தான்முடியும். … நான் இல்லை என்றாலும் உனக்கு வேறொரு நல்ல பொண்ணு கிடைப்பா… உடனே இல்லா விட்டாலும், வருங்காலத்தில் என்னை மறந்து நீ சந்தோஷமா இருப்ப…

ஆனால் நந்தகுமாரைப் பத்திக் கொஞ்சம் யோசிச்சுப் பார்… அவர் கண் முழிக்கிறது நாளைக்கா இருக்கலாம், இல்லை, இன்னும் இரண்டு வருஷம் கழிச்சும் இருக்கலாம்… அப்போ அவருக்கு வேலையிருக்காது… வசதி இருக்காது…

அவர் மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கணும்… அவர் இழப்பிலிருந்து வெளிவரதுக்குள்ள காலம் கடந்திருக்கலாம்… அவருக்கு இறுதிவரை ஓர் துணை கிடைக்காமலே போகலாம்…

அதனால் அவர் கண் முழிக்கிறப்போ அவர் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது எனப் புரிய வைக்கணும். அது என்னால் மட்டும் தான் முடியும்…” என நிறுத்தினாள்.

ஜனனி பேசுவதைக் கேட்ட பிரதீப்புக்கு எரிச்சல் கூடிக் கொண்டே போனது. “நீ பேசறதைக் கேட்டு எனக்கு எரிச்சல் வருது.. ஆனால் நீ ஓர் முடிவோட தான் என்னோட பேச வந்திருக்க… அதனால் உன்னோட சண்டைப் போட விரும்பலை… ஆனால் ஒண்ணு… இப்போ தான் எனக்கு உன்மேலே இருக்கும் காதல் அதிகமாகுது…” என்றான் வேதனையுடன்.

“வேண்டாம் பிரதீப்… ப்ளீஸ்… அப்படிச் சொல்லாத…” என்ற ஜனனியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. வலது கரம் கொண்டு அதைத் துடைத்தவள்,

“பிரதீப், மனசுக்குள்ள நந்தகுமாரைப் பற்றிய கவலையோட உன்னைத் தாராளமா கல்யாணம் பண்ணிக்கிறேன்… ஆனால் நான் தாமரை இலை மேல் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியைப் போலத் தான் ஒட்டாமல் இருப்பேன்…

இதுவே நான் நந்தாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டால், வானம் பார்த்துத் திறந்திருக்கும் சிப்பியைப் போன்ற அவர் வாழ்வில் நான் மழைத்துளியாக நுழைவேன்.

அவர் உள்ளே இறங்கி, நான் முத்தாகவும் மாறுவேன்… என் உயிர்த்துளி அவரோட சங்கமமாகிறது தான் சரி… கூடிய விரைவில் சங்கமமாகும்… அந்த நம்பிக்கை எனக்கிருக்கு…” என்றாள் ஜனனி.

சற்றுநேரம் கோவில் மணியோசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அமர்ந்த நிலையில் ஜனனி அப்படியே அமர்ந்திருக்க, பிரதீப் எதுவும் பேசாமல் கோவில் வாசலை நோக்கி நடந்தான்.

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *